உடல்நலக்குறைவால், தி.மு.க. முன்னாள் எம்.பி. சிவசுப்ரமணியன் மரணம் - மு.க.ஸ்டாலின் அஞ்சலி


உடல்நலக்குறைவால், தி.மு.க. முன்னாள் எம்.பி. சிவசுப்ரமணியன் மரணம் - மு.க.ஸ்டாலின் அஞ்சலி
x
தினத்தந்தி 15 Jun 2019 4:30 AM IST (Updated: 15 Jun 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. முன்னாள் எம்.பி. சிவசுப்ரமணியன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கரின் தந்தையும், தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.சிவசுப்ரமணியன்(வயது 82) உடல் நலக்குறைவு காரணமாக அரியலூரில் உள்ள வீட்டில் நேற்று காலை மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல், ஆண்டிமடத்தில் உள்ள மற்றொரு வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து உடனடியாக காரில் புறப்பட்டு ஆண்டிமடத்திற்கு மதியம் வந்தார். பின்னர் ஸ்டாலின் சிவசுப்ரமணியனின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர், சிவசுப்ரமணியனின் மகன் சிவசங்கருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மாநில இளைஞரணி இணை செயலாளர் சுபா.சந்திரசேகர், அரியலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் லூயிகதிரவன், அரியலூர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் டி.எம்.டி.அறிவழகன், ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், அரியலூர் விஷால் கார்டன் டி.கிருஷ்ணகுமார், மினி பஸ் உரிமையாளர் கே.சி.கணேஷ், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களும் சிவசுப்ரமணியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

சிவசுப்ரமணியனின் உடலுக்கு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிவசுப்ரமணியனின் இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான ஆண்டிமடம் அருகே உள்ள தேவனூரில் உள்ள வீட்டில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இறந்த சிவசுப்ரமணியனுக்கு சிவராஜேஸ்வரி என்கிற மனைவியும், சிவசங்கர், சிவக்குமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

மரணமடைந்த சிவசுப்ரமணியன் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவர் ஆவார். அவர் கடந்த 1954-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்தபோது, திராவிடர் கழக உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு மேடைகளில் உரையாற்ற தொடங்கினார். 1955-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டத்தில், தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயம் வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 1960 முதல் 1966 வரை தமிழ்நாடு எங்கும் தந்தை பெரியார் கலந்து கொண்ட கூட்டங்களில் சேர்ந்து சுற்றுப்பயணம் செய்தார். 1966-ம் ஆண்டு அரியலூரில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் பொருளாளராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்தார்.

பின்னர் 1977-ம் ஆண்டில் தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற தொடங்கிய சிவசுப்ரமணியன் 1983 முதல் 1991-ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க. துணை செயலாளராகவும், பணியாற்றி வந்ததோடு, கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், வெளி மாநில தொடர்பு செயலாளராகவும், அரியலூர் மாவட்ட அவை தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது தி.மு.க.-வின் சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினராக இருந்தார். 1971-ம் ஆண்டில் ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவசுப்ரமணியன் 1989 முதல் 1991 வரை ஆண்டிமடம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1998 முதல் 2004 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். தனது சொந்த ஊரான தேவனூர் ஊராட்சி மன்ற தலைவராக இரண்டு முறையும், இலையூர் கூட்டுறவு வங்கித் தலைவராகவும், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு உறுப்பினராகவும், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story