கோவில்பட்டி அருகே காய்கறிகள் ஏற்றி வந்த மினிலாரி கவிழ்ந்தது 2 பேர் காயம்


கோவில்பட்டி அருகே காய்கறிகள் ஏற்றி வந்த மினிலாரி கவிழ்ந்தது  2 பேர் காயம்
x
தினத்தந்தி 16 Jun 2019 3:30 AM IST (Updated: 15 Jun 2019 5:23 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே காய்கறிகள் ஏற்றி வந்த மினிலாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே காய்கறிகள் ஏற்றி வந்த மினிலாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

மினிலாரி கவிழ்ந்தது

சேலத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை நோக்கி வந்து கொண்டிருந்தது. காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள தேவஸ்தலம் என்ற ஊரைச் சேர்ந்த தனசேகரன் மகன் சந்தோஷ் (வயது 23) என்பவர் மினிலாரியை ஓட்டி வந்தார். அவருடைய நண்பரான சீர்காழியை சேர்ந்த காத்தலிங்கம் மகன் கார்த்திக் (27) என்பவரும் உடன் வந்தார்.

நேற்று காலை கோவில்பட்டியில் இருந்து நாலாட்டின்புத்தூரை நோக்கி சென்றபோது மினிலாரி திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சர்வீஸ் ரோட்டில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.

2 பேர் காயம் 

இதில் சந்தோஷ், கார்த்திக் ஆகிய இருவரும் லேசான காயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தின்போது ரோட்டின் ஓரம் நின்று கொண்டிருந்த மொபட் மீது மினிலாரி கவிழ்ந்ததில், மொபட் சேதம் அடைந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story