கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வந்தார்: ஜிப்மரில் சிகிச்சை பெறும் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை, ஆய்வக அறிக்கையில் தகவல்


கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வந்தார்: ஜிப்மரில் சிகிச்சை பெறும் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை, ஆய்வக அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 15 Jun 2019 1:03 PM GMT (Updated: 15 Jun 2019 1:03 PM GMT)

கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வந்து ஜிப்மரில் சிகிச்சை பெறும் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). கேரள மாநிலம் குருவாயூரில் தொழிலாளியாக வேலை செய்த இவர் கடும் காய்ச்சல் காரணமாக கடலூருக்கு திரும்பினார். கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அதன்பிறகும் காய்ச்சல் குறையவில்லை. தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். இதனால் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரியவந்ததையடுத்து அங்கிருந்து வந்துள்ளதால் நடராஜனுக்கும் இந்த பாதிப்பு இருக்கலாம் என்று டாக்டர்கள் சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் நடராஜனின் உடல்நிலை மோசமானது. இதனால் கவலைக்கிடமான நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

தனி அறையில் வைத்து நடராஜனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரது ரத்த மாதிரி குறித்த அறிக்கை கிடைத்துள்ளது. அதில் நடராஜனுக்கு நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்பது தெரியவந்தது.

இருந்தபோதிலும் நடராஜனின் உடல்நிலை கவலைக் கிடமாகவே உள்ளது. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Next Story