ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை


ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Jun 2019 3:00 AM IST (Updated: 15 Jun 2019 7:41 PM IST)
t-max-icont-min-icon

ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தனியார் ஐ.டி.ஐ. சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நெல்லை, 

ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தனியார் ஐ.டி.ஐ. சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து நெல்லையில் தனியார் ஐ.டி.ஐ. நலச்சங்க தலைவர் சுல்தான் அலாவூதின், ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

தொழிற்பயிற்சி நிலையங்கள் 

தமிழகத்தில் 83 அரசு ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களும், 450 தனியார் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களும் உள்ளன. நெல்லை மண்டலத்தில் 14 அரசு ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களும், 58 தனியார் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களும் உள்ளன. இங்கு குறுகியகால தொழிற்பயிற்சி கல்விகளான பிட்டர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், டீசல் மெக்கானிக், வெல்டர், கணினி பயிற்சி போன்றவை கற்று தரப்படுகிறது. ஒரு நாளைக்கு 5 மணி நேரம் செய்முறை கல்வி பயிற்சி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி முறையில் இந்த தொழில் நுட்ப கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

ஐ.டி.ஐ. படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் உள்ளது. என்ஜினீயரிங், டிப்ளமோ படித்தவர்களைவிட அதிக அளவில் வேலைவாய்ப்பில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் உள்ளனர். அரசு ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் படிப்பவர்களுக்கு அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. கலந்தாய்வில் கலந்து கொண்டு, அரசு ஒதுக்கீட்டில் தனியார் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருகின்ற மாணவர்களுக்கு, உரிய கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது.

கூடுதல் அவகாசம் வழங்க... 

இந்த ஆண்டு ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு மாணவர்கள் குறைந்த அளவே விண்ணப்பித்து உள்ளனர். ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடைந்து விட்டது. எனவே ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்.

மாணவர்களிடையே ஐ.டி.ஐ.யில் சேருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஐ.டி.ஐ. படிக்கின்ற மாணவ–மாணவிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். போலியாக செயல்படுகின்ற ஐ.டி.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story