மீன்பிடி தடைகாலம் முடிந்தது தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
மீன்பிடி தடைகாலம் முடிந்ததையடுத்து தூத்துக்குடியில் நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
தூத்துக்குடி,
மீன்பிடி தடைகாலம் முடிந்ததையடுத்து தூத்துக்குடியில் நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இனப்பெருக்க காலம்
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15–ந்தேதி முதல் ஜூன் மாதம் 14–ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் தடைக்காலம் அறிவிக்கப்பட்டது. இதனால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 412 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மீனவர்கள் மீன்பிடித்தலுக்கு செல்ல தயாராகின்ற வகையில் தங்கள் படகுகளில் உள்ள சிறு, சிறு பழுதுகளை நீக்கும் பணியையும், வலைகளில் ஏற்பட்ட சேதங்களையும் சரி செய்தனர்.
கடலுக்கு சென்றனர்
இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனால் நேற்று அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 250 விசைப்படகுகளில் 212 விசைப்படகுகள் நேற்று காலையில் கடலுக்கு சென்றன. அதே போல் மாவட்டம் முழுவதில் உள்ள 412 விசைப்படகுகளில் 310–க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.
மீன்பிடி தடை காலத்தின் போது மீன் வரத்து குறைவாக இருந்தது. இதனால் மீன்களின் விலை உயர்ந்து விற்கப்பட்டது. இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து மீனவர்கள் கடலுக்கு சென்றதால் மீன் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story