மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை உடனே வழங்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை


மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை உடனே வழங்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
x
தினத்தந்தி 16 Jun 2019 3:00 AM IST (Updated: 15 Jun 2019 7:52 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்து உள்ளது.

நெல்லை, 

மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்து உள்ளது.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கல்வி மாவட்ட செயலாளர் சாம் மாணிக்கராஜ், வட்டார செயலாளர் கிறிஸ்டோபர் மற்றும் நிர்வாகிகள், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பாடப்புத்தகங்கள் வழங்க... 


கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் கடந்த 3–ந்தேதி திறக்கப்பட்டது. பள்ளிக்கூடம் திறந்து 2 வாரங்கள் முடிந்த பிறகும், 3, 4, 5 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை பாடப்புத்தகம் வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படாததால், ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

புத்தகங்கள் வழங்குவதில் மேலும் காலதாமதம் ஏற்படின், குறிப்பிட்ட காலத்திற்குள் முதல்பருவ பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க முடியாதநிலை ஏற்படும். எனவே தமிழக அரசும், கல்வித்துறையும் மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடியுடன் இணைந்த அரசு மற்றும் ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் முன்பருவக்கல்வி வகுப்புகள் தொடங்க, அந்தந்த ஒன்றியங்களில் உபரியாக உள்ள பணியில் இளையவரை மாற்றுப்பணியில் பணிநிரவல் செய்ய தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில மையத்தின் சார்பில், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தடையாணை பெறப்பட்டது. தமிழக அரசின் மேல்முறையீட்டால் தடையாணை விலக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

பணிநிரவல் 


இதைத்தொடர்ந்து மீண்டும் இந்த மாத தொடக்கத்தில் பணிநிரவல் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் சில ஒன்றியங்களில் பணியில் இளையவரையும், சில ஒன்றியங்களில் பணியில் மூத்தவரையும் அங்கன்வாடிகளில் பணிநிரவல் செய்து உள்ளனர்.

பணிநிரவல் விதி மற்றும் அங்கன்வாடி உத்தரவில், ஒன்றிய அளவில் பணியில் சேர்ந்த இளையவரைதான் பணிநிரவல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. எனவே அனைத்து ஒன்றியங்களிலும் விதிகளின்படி, இளையவரை பணிநிரவல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story