நெல்லையில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை: கைது செய்யப்பட்ட 6 பேர் சிறையில் அடைப்பு
நெல்லையில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை,
நெல்லையில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
வெட்டிக்கொலை
நெல்லை அருகே உள்ள கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ. நகரை சேர்ந்தவர் அசோக் (வயது 23). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வந்தார். முன்விரோதம் காரணமாக இவரை ஒரு கும்பல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்தனர்.
இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அசோக்கின் உறவினர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நேற்று முன்தினம் அசோக் உடலை உறவினர்கள், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பெற்றுச்சென்று இறுதி சடங்கு செய்தனர்.
சிறையில் அடைப்பு
இந்த வழக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரால் தேடப்பட்டு வந்த பேச்சிராஜன்(19), இவருடைய நண்பர் முத்துப்பாண்டி (27), ஏற்கனவே கைது செய்யப்பட்ட முருகனின் சகோதரர்கள் பாலு (48), மூக்கன் (45), கணேசன் (43) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் கொலை பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு நேற்று காலை 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி அவர்கள் 6 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கலெக்டருடன் சந்திப்பு
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீராம், தாலுகா குழு செயலாளர் சுடலை ராஜ் உள்ளிட்டோர் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள், ‘‘அசோக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். வழக்கை விரைவாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ. நகர் மக்கள் செல்லும் ரோடு மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அசோக் குடும்பத்தில் ஒருவருக்கு 3 மாதங்களுக்குள் அரசு வேலை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அசோக் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். ஆர்.எஸ்.ஏ. நகர் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மயானத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரையிருப்பு பகுதியை பிரச்சினைகளுக்கு உரிய பகுதியாக அறிவிக்க வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் சாதிய பிரச்சினைகளுக்கு எதிரான பிரசாரத்தை முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து அரசு நடத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story