எடப்பாடி அருகே நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவர் தற்கொலை


எடப்பாடி அருகே நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Jun 2019 4:45 AM IST (Updated: 16 Jun 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அருகே நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எடப்பாடி,

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வெள்ளாண்டி வலசை பகுதியை சேர்ந்தவர் சேட்டு, தையல் தொழிலாளி. இவருடைய மனைவி ராஜாத்தி. இவர்களுக்கு மதுமிதா (வயது 19) என்ற மகளும், பாரத பிரியன்(17) என்ற மகனும் இருந்தனர்.

இவர்களில் மதுமிதா எடப்பாடி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். பாரதபிரியன் கடந்த கல்வியாண்டில் எடப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்து இருந்தார்.

இவர் மருத்துவக்கல்விக்கான தகுதித்தேர்வை(நீட்) எழுதி இருந்தார். இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் அந்த மாணவர் 111 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

குறைவான மதிப்பெண் எடுத்ததால் அவரது மருத்துவக்கல்வி கனவில் ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால் அந்த மாணவர் மனம் உடைந்து காணப்பட்டார். மகனின் நிலையை பார்த்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சென்று மகனுக்கு மருத்துவக்கல்விக்கான சீட் கிடைக்குமா? என்று விசாரித்துள்ளனர்.

அதன்பிறகு அவரது பெற்றோர் மகனை மருத்துவக்கல்வி படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து அவரிடம் கூறி உள்ளனர்.

இதனால் மிகுந்த கவலை அடைந்த பாரத பிரியன் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் விட்டத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே எடப்பாடிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பிய மதுமிதா, தனது தம்பி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோரும், உறவினர்களும் மாணவர் பாரதபிரியனின் உடலை அடக்கம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story