காரிமங்கலம் அருகே ஆசிரியை வீட்டில் 19 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் திருட்டு


காரிமங்கலம் அருகே ஆசிரியை வீட்டில் 19 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 16 Jun 2019 4:15 AM IST (Updated: 16 Jun 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே ஆசிரியை வீட்டில் 19 பவுன் நகைகள் மற்றும் ரூ.55 ஆயிரம் திருட்டு போனது.

காரிமங்கலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டியை அடுத்த பழத்தோட்டத்தில் வசித்து வருபவர் மலர்விழி (வயது 35). இவர் பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் பிரகா‌‌ஷ் (39). இவர்களுக்கு தேசிகா (13) என்ற மகளும், தீபமித்ரன் (2) என்ற மகனும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் மாடி வீடு கட்டி தனது மாமனார், மாமியாருடன் வாழ்ந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். அப்போது வீட்டின் தரைதளத்தில் மலர்விழியின் மாமனார் கந்தசாமி, மாமியார் சாந்தி ஆகிய இருவரும் படுத்து கொண்டனர். முதல் மாடியின் வராந்தாவில் மலர்விழியின் கணவர் பிரகா‌‌ஷ் படுத்து இருந்தார். வீட்டில் உள்ள தனி அறையில் மலர்விழி தனது மகன் தீபமித்ரனுடன் தரையில் படுத்து கொள்ள மகள் தேசிகா மட்டும் கட்டிலில் படுத்து இருந்தார்.

நேற்று காலை எழுந்து வீட்டு வேலையில் இருந்த மலர்விழியிடம் கணவர் பிரகா‌‌ஷ் பணம் எடுத்து வர கூறியுள்ளார். அப்போது அறைக்கு சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 19 பவுன் நகை மற்றும் ரூ.55 ஆயிரம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டு சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு வீட்டின் கீழ்தளத்திலிருந்த கணவர் பிரகா‌‌ஷ் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் மலர்விழி இருந்த முதல் மாடிக்கு ஓடிப்போய் பார்த்தனர். அப்போது நகை மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிந்தது.

இந்த துணிகர திருட்டு குறித்து மலர்விழி காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தங்கவேல் ஆகியோர் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வந்து விசாரணை மேற்கொண்டார். தர்மபுரியிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த துணிகர திருட்டு குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story