நெல்லை மாவட்ட எல்லையில் உள்ள கிராமத்தினர் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மனு


நெல்லை மாவட்ட எல்லையில் உள்ள கிராமத்தினர் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மனு
x
தினத்தந்தி 16 Jun 2019 4:45 AM IST (Updated: 16 Jun 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் 5 கிராம மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி மனு அளித்தனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள கொருக்காம்பட்டி ஊராட்சியில் அடங்கிய கொருக்காம்பட்டி, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, மூக்கர்நத்தம், கோவில் செந்தட்டியாபுரம் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்-அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்துக்கு வான்முகில் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது.

முகில் அமைப்பபின் திட்ட மேலாளர் அருள் தலைமை தாங்கினார். முன்னதாக வழிகாட்டுனர் மைதவள்ளி வரவேற்று பேசினார். செல்லம்பட்டி ஊர் நாட்டாண்மை ராஜேந்திரன், சத்துணவு அமைப்பாளர் சுப்பையா, மஞ்சுளா, ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொருக்காம்பட்டி பஞ்சாயத்து செயலர் பொன்னையா விளக்க உரையாற்றினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களில் கூறியிருந்ததாவது:-

விருதுநகர்-நெல்லை மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமங்களில் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பெரும்பாலும் விவசாய பணிகள், கூலி வேலை செய்பவர்களாக உள்ளனர்.

இங்கு சாலை அமைத்து 10 வருடங்களுக்கு மேலாகிறது. வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் இருந்து, வெம்பக்கோட்டைக்கு இது வரை பஸ் வசதி செய்து தரப்படவில்லை.

இந்த பகுதியை சேர்ந்தவர்கள் அடுத்த பகுதிகளுக்கு, கால்நடையாகவோ அல்லது சைக்கிள் மூலமாகவோ சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டி உள்ளது. இதனால், பிரசவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு வெளியே செல்ல முடிவதில்லை, சாலையும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் கார், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்கள் கூட வர மறுக்கின்றனர்.

மேல்நிலைப் பள்ளி எதுவும் இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 5 கிேலா மீட்டர் தூரத்திற்கு அப்பால் அமைந்துள்ள நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். காலையில் பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் 5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தயாராக வேண்டி உள்ளது.

மேலும் தெருக்களில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் தெருவின் நடுவே கழிவுநீர் செல்லும் அவல நிலை இன்றும் தொடர்கிறது.

எனவே முறையான சாலை வசதி, தேவைக்கு ஏற்ப பஸ் வசதி, முறையான குடிநீர், சுகாதார பணிகள் செய்வதுடன் கிணறுகளை தூர்வார வேண்டும், கால்நடை மருத்துவமனை கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

Next Story