சாலைகளை மேம்படுத்தும் பணி: உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் ஆய்வு
புதுவையில் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி,
புதுவை நகரை அழகுபடுத்த உள்ளாட்சித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், குப்பைகள் அகற்றப்பட்டு ஓரளவுக்கு நல்ல முறையில் வீதிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும் முக்கிய சாலைகள் பலவற்றில், குறிப்பாக பொதுப்பணித்துறை சார்பில் பராமரிக்கப்படும் சாலைகளில் ஓரமாக உள்ள வாய்க்கால்களில் சிலப்புகள் உடைந்திருப்பது, வாய்க்கால் கழிவுகளை அள்ளி சாலையில் போடுவது, ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு கட்டைகளில் உள்ள மண் சாலையில் விழுந்து கிடப்பதால் சில நேரங்களில் சாலைகள் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன.
இதுபோன்றவற்றை தவிர்த்து சாலைகளை அழகுற பராமரிக்கும் பணியில் உள்ளாட்சித்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக சாலையோர கடைகளில் குப்பை கூடைகள் வைத்து கழிவுகளை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை, காமராஜ் சாலை உள்ளிட்ட சாலைகளில் இந்த நடவடிக்கைகளை முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக ஆய்வாளர்களும் தனித்தனியாக நியமிக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வை செய்து வருகின்றனர். கட்டிட கழிவுகள் கண்ட இடத்தில் கொட்டப்படுவதாலும் ரோடே குப்பை மயமாக காட்சி அளிக்கிறது. இவற்றை சரிசெய்ய ஆய்வாளர்கள் நாள்தோறும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பணிகளை புதுவை உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது புதுவை நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது பெரும்பாலான வீதிகளில் சுத்தம் கடைபிடிப்பதை கண்டு இயக்குனர் மலர்க்கண்ணன் திருப்தி தெரிவித்தார்.
சில இடங்களில் பொதுப்பணித்துறை, மின்துறை சார்ந்த பணிகள் நடத்தப்பட்டு அங்கு சரிவர வீதிகள் பராமரிக்கப்படாமல் இருப்பதை கண்டு அவர் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதமும் அனுப்பி உள்ளார்.