பழம் பறிக்க மரத்தில் ஏறியபோது பரிதாபம், பாறையில் தவறி விழுந்து கரடி சாவு
பழம் பறிக்க மரத்தில் ஏறியபோது பாறையில் தவறி விழுந்து கரடி பரிதாபமாக உயிரிழந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கிளிப்பி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உடலில் பலத்த காயங்களுடன் பாறை மீது கரடி ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நீலகிரி மாவட்ட உதவி வன அலுவலர் சரவணகுமார், கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனவர் தினேஷ்குமார், வனக்காப்பாளர்கள் நாகேஷ், சான்மோன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கீழ் கோத்தகிரியில் இருந்து கால்நடை டாக்டர் ரேவதி வரவழைக்கப்பட்டு, இறந்து கிடந்த கரடியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் அங்கேயே தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
இறந்து கிடந்தது 9 வயது மதிக்கத்தக்க பெண் கரடி ஆகும். கிளிப்பி பகுதியில் உள்ள ஓடையில் தண்ணீர் குடிக்கும்போது, அந்த கரடியின் மூக்குக்குள் அட்டைகள் புகுந்து உள்ளன. இதை அறியாத அந்த கரடி அருகிலுள்ள நாவல் மரத்தில் ஏறி பழங்களை பறித்து தின்பதற்கு முயன்றுள்ளது. அப்போது மூக்குக்குள் புகுந்து இருந்த அட்டைகள் ரத்தத்தை உறிஞ்ச தொடங்கி உள்ளன. இதனால் வலி தாங்க முடியாமல் தவித்த அந்த கரடி தவறி கீழே இருந்த பாறையில் விழுந்துள்ளது. இதில் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கரடி உயிரிழந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story