கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் மூலம் 550 எம்.எல்.டி. தண்ணீர் பெறப்படும், சென்னையில் தினமும் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை


கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் மூலம் 550 எம்.எல்.டி. தண்ணீர் பெறப்படும், சென்னையில் தினமும் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2019 11:00 PM GMT (Updated: 15 Jun 2019 8:04 PM GMT)

கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் மூலம் 550 எம்.எல்.டி. தண்ணீர் பெறப்படும். சென்னையில் தினமும் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 142 வருடங்களில் இல்லாத வகையில் 2017-ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி நிலவியது. அப்போதும் குடிநீர் பிரச்சினையை சமாளித்தோம். இந்நிலையிலும், தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 5,891 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 62 சதவீதம் மழைகுறைவு. நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்துள்ளது.

வறட்சி நிவாரணப் பணிகளால் நகர்ப்புறம் மற்றும் ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், 395 மில்லியன் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்கப்பட்டது. பல்வேறு பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், தனி திட்டங்கள் மற்றும் உள்ளூர் ஆதாரங்களை மேம்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளால் தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 7,000 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்தில், குடிநீர் திட்டப் பணிகளுக்காக, 21,988 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில், குடிநீர்த் திட்டப் பணிகளுக்காக, வெறும், 7,280 கோடியே 12 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதே போல, கடந்த மூன்றாண்டுகளில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ.15,838 கோடி ஒதுக்கி உள்ளது. சென்னை நகர பகுதிகளில், ரூ.2638.42 கோடியில் 4,098 பணிகளும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.5,346 கோடியில் 268 குடிநீர் பணிகளும், சென்னை நீங்கலாக பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.4409 கோடியில் 6,834 குடிநீர் பணிகளும், பேரூராட்சி பகுதிகளில், ரூ.196 கோடியில், 4,417 பணிகளும், ஊரகப் பகுதிகளில், 1,929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.08 லட்சம் குடிநீர் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அம்ரூத் திட்டத்தின் கீழ், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 பெரிய குடிநீர் திட்டப் பணிகள் ரூ.6.496 கோடியில் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன.

சென்னை நகரின் தற்போதைய மக்கள்தொகை 74.38 லட்சம் ஆகும். 2016 டிசம்பர் மாதம்வரை நாள் ஒன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 டி.எம்.சி. நீர் பெறப்பட வேண்டும். ஆனால் 2018-19-ம் ஆண்டில், பெறப்பட்ட நீரின் அளவு 1.98 டி.எம்.சி. மட்டுமே ஆகும். கண்டலேறு நீர்த் தேக்கத்தில் 6.40 டி.எம்.சி.க்கு மேல் இருந்தால் மட்டுமே சென்னைக்கு ஆந்திர அரசு குடிநீர் வழங்கும். தற்போதுள்ள நீரின் அளவு 4.58 டி.எம்.சி. மட்டுமே இருப்பு உள்ளது. இதனால் ஆந்திர அரசால் குடிநீர் வழங்க இயலவில்லை.

இந்த ஆண்டு மே மாதம் முதல் சென்னை குடிநீர் வாரியம் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கி வருகிறது. மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களிலிருந்து நாளொன்றுக்கு தலா 90 எம்.எல்.டி. குடிநீர் பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

பருவமழை பொய்த்ததன் காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்த அளவே இருந்த போதிலும் தற்போதுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் திட்டம், நெய்வேலி நீர்படுகையிலிருந்து கூடுதலாக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், விவசாய கிணறுகள் வாடகைக்கு அமர்த்துதல், சிக்கராயபுரம் கல்குவாரி உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்கள் மூலம் நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை நகரின் கோடை கால குடிநீர் தேவையை சமாளிக்க மொத்தம் 233.72 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெய்வேலி நீர் படுகையில் கூடுதலாக 9 புதிய ஆழ்துளை கிணறுகள் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. நெய்வேலி சுரங்கம், பரவனாறு ஆற்றில் இருந்து ரூ.6.67 கோடி மதிப்பீட்டில் 60 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.

பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயக் கிணறுகள் மூலம் 95 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது தினமும் 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. சிக்கராயபுரம் கல்குவாரி மூலம் பிப்ரவரி மாதம் முதல் ரூ.11 கோடி மதிப்பீட்டில் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எருமையூர் கல்குவாரியிலிருந்து ரூ.19.17 கோடி மதிப்பீட்டில் ஜூலை மாதம் முதல் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரட்டைஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளிலிருந்து 30 மில்லியன் லிட்டர் நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க ரூ.53 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரட்டை ஏரியில் பணிகள் முடிக்கப்பட்டு, நீர் பெறுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டைக்கு வழங்கப்படும் 3 எம்.எல்.டி. பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும்.

இதர தேவைகளுக்கு கூடுதலாக 358 இந்தியா மார்க் 2 பம்புகள், மற்றும் 126 மின்மோட்டார் பொருத்திய ஆழ்துளை கிணறுகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதியதாக 1,190 எச்.டி.பி.இ. தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன.

900 லாரிகள் வாடகைக்கு அமர்த்தி நாளொன்றுக்கு சராசரியாக 9100 லாரி நடைகள் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவை தவிர, கோயம்பேடு மற்றும் கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் தலா நாளொன்றுக்கு 45 எம்.எல்.டி. சுத்திகரிப்பு திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையில் 3-ம் நிலை சுத்திகரிப்பு நிலையம் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இதில், கொடுங்கையூரில் அமைக்கப்பட்டு வரும் நிலையத்திலிருந்து வடசென்னையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கும் அதே போல, கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கும் அடுத்த மாதம் முதல், நாள் ஒன்றுக்கு தலா 20 மில்லியன் லிட்டர் மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்பட உள்ளது.

இதன் நீர் வழங்கப்படும் போது, இந்த தொழிற்சாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 40 எம்.எல்.டி. நீர் சென்னை மாநகர குடிநீர் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.

சென்னை நகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கான கத்திவாக்கம், வளசரவாக்கம், போரூர், திருவொற்றியூர், அம்பத்தூர், மதுரவாயல், ஆலந்தூர், ஈஞ்சம்பாக்கம், மீனம்பாக்கம், நந்தம்பாக்கம், நொளம்பூர், காரம்பாக்கம் மற்றும் உள்ளகரம்- புழுதிவாக்கம் ஆகிய 13 பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள் ரூ.555 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

நெற்குன்றம், மாதவரம், ராமாபுரம், மணப்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், இடையான்சாவடி, சடையான் குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், வடபெரும்பாக்கம், மணலி, சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், புழல், மாத்தூர், ஜல்லடம்பேட்டை, மடிப்பாக்கம், உத்தண்டிபள்ளிக்கரணை, உள்ளகரம்-புழுதிவாக்கம், கொட்டிவாக்கம், சின்னசேக்காடு, முகலிவாக்கம், பெருங்குடி, மற்றும் பாலவாக்கம் ஆகிய 27 விரிவாக்கப்பட்ட பகுதிகளில் ரூ.704.53 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும், 2021-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் குடிநீர் குழாய்கள் உள்ள 34,173 தெருக்களில், சில பகுதிகளில் கேபிள் நிறுவனங்கள், மின்சார வாரியம், மெட்ரோ ரெயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் பொழுது, உடைப்புகள் ஏற்படுவதால், குடிநீரில் கழிவுநீர் கலக்க ஏதுவாகிறது. அவைகளும் புகார் பெற்றவுடன் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. மேலும், புறநகர் பகுதிகளில் கல்குவாரிகளிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து, பம்மல், அனகாபுத்தூர், சிட்லப்பாக்கம் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 1,800 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இது தவிர சில மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தனித் திட்டங்களும் பயன்பாட்டில் உள்ளன. தி.மு.க. ஆட்சியில் வெறும் அறிவிப்புகளாக விட்டுச் செல்லப்பட்ட, 8 பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு, 3,276 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு, நிதி ஆதாரங்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களை இறுதி செய்து, பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இத்திட்டங்கள் மூலம் 60.79 லட்சம் மக்கள் நாளொன்றுக்கு 341 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை , கோவை, கடலூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் புதியதாக 15 பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ.4239 கோடி மதிப்பீட்டில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திட்டம் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.

இதில் தற்போது வரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், கோவை, கடலூர், திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் சுமார் 46 லட்சம் மக்கள் 197.19 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறும் வகையில் 7 பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் ரூ.2298.54 கோடி மதிப்பீட்டில், பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கும் வகையில் செயலாக்கத்தில் உள்ளன.

கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் வினியோகம் குறைபாடுகளை சமாளிக்கும் பொருட்டு, மாநில பேரிடர் நிவாரண நிதியின் மூலம் ரூ.43.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தினசரி 40 மில்லியன் லிட்டர் கூடுதலாக குடிநீர் வழங்கும் வகையில் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை, திருப்பூர், திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு, தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 மாநகராட்சிகளில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 110 லிட்டருக்கு மேலும், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில் மற்றும் ஓசூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 70 முதல் 109 லிட்டர் வரை குடிநீர் வழங்கப்படுகிறது.

மொத்தமுள்ள 122 நகராட்சிகளில், 61 நகராட்சிகளில் தனி நபருக்கு ஒரு நாளைக்கு 90 லிட்டருக்கு மேலும், 61 நகராட்சிகளில் தனி நபருக்கு 40 முதல் 90 லிட்டர் வரையிலும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 5 மாநகராட்சிகள் மற்றும் 30 நகராட்சிகளில் மட்டும் 3 தினங்களுக்கு மேல் குடிநீர் வழங்கும் நிலை உள்ளது.

கோடை காலத்தில் நீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக 7 மாநகராட்சிகள் மற்றும் 80 நகராட்சிகளில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் 2346 குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ள செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

528 பேரூராட்சிகளிலும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 70 முதல் 90 லிட்டர் வரையில் குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. ஊரகப் பகுதிகளில், மொத்தமுள்ள 79,394 குக்கிராமங்களில், 9,614 கிராமங்களில் 40 லிட்டருக்கு குறைவாகவும், 46,802 குக்கிராமங்களில் 40 முதல் 55 லிட்டர் வரையிலும் 22,978 குக்கிராமங்களில் 55 லிட்டருக்கு மேலும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.449 கோடி மதிப்பீட்டில் 30,951 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது ரூ.134 கோடியில் 12,339 குடிநீர் பணிகள் அனுமதிக்கப்பட்டு, 9,887 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில், 64,841 குடிநீர் பணிகள் ரூ.1,061 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன.

நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை நிறுவி, 20 வருடங்கள் இயக்கி பராமரிக்கும் பணிக்காக கோப்ரா, ஸ்பெயின் மற்றும் டெக்டான் யு.எ.இ., கூட்டு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1689.35 கோடிக்கு 27.5.2019 அன்று பணி ஆணை வழங்கப்பட்டது.

அதேபோல, போரூர் பகுதியில் அமையவுள்ள 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை வடிவமைத்து, 20 வருடங்கள் இயக்கி பராமரிக்கும் பணிக்காக திட்ட மேலாண்மை மற்றும் கட்டுமான பணிகளை கண்காணித்தல் ஆகிய பணிகளுக்காக ஆட்களை தேர்வு செய்யும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. வரும் ஜூலை இதற்கான பணி ஆணை வழங்கப்பட்டு, நிலையத்திற்கான ஒப்பந்தப்புள்ளி தயார் செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்.

குடிநீர் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றன. சென்னையில் பலர் வீடுகளை காலி செய்துவிட்டு செல்வதாகவும் தகவல்களை பரப்புகிறார்கள். குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story