ராசிபுரத்தில் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சரோஜா ஆய்வு


ராசிபுரத்தில் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சரோஜா ஆய்வு
x
தினத்தந்தி 16 Jun 2019 3:45 AM IST (Updated: 16 Jun 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சரோஜா ஆலோசனை நடத்தினார்.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநில அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழக துணை இயக்குனர் மாலதி ஹெலன் முன்னிலையில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆய்வு நடத்தினார்.

நகராட்சி அலுவலர்கள், இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் ஆகியோருடன் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். பிறகு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ராசிபுரம் பழைய பஸ் நிலைய பகுதியில் வணிக வளாகம் அமைக்க இடத்தினை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து பணிபுரியும் மகளிருக்கு எல்லை மாரியம்மன் கோவில் அருகில் விடுதி அமைக்கவும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில் பூங்கா மேம்பாடு செய்தல், மின்வாரிய காலனியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இடத்தைப்பெற்று வீட்டு வசதி குடியிருப்புகள் கட்டுதல் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

மேலும் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திரு.வி.க. பூங்காவை மேம்பாடு செய்தல், அங்குள்ள குடிநீர் கிணற்றை தரம் உயர்த்துதல், உழவர் சந்தையில் காலியாக உள்ள இடத்தில் பழைய கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகளை அமைத்தல், துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுதல் உள்பட பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆய்வு செய்தார். இந்த திட்டங்களை செய்து முடிக்க மேற்கொள்ள வேண்டிய பூர்வாங்க பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகத்திடம் ராசிபுரம் நகராட்சி இத்திட்டங்களை செயல்படுத்த நிதி கோரும். மேலும் இக்கழகம் திட்டப் பணிகளுக்கான அறிக்கை தயார் செய்து தனியார் பங்களிப்புடன் இந்தப் பணிகளை செய்து முடிக்க உறுதுணை புரியும். அதற்கான முதற்கட்ட ஆய்வுநடந்தது.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக்கழக முதல்வர் விவேக், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, தாசில்தார் சாகுல் அமீது, முன்னாள் நகர்மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் வெ.விஜயஸ்ரீ, நகராட்சி பொறியாளர் நடேசன், கோவில் நிர்வாக அதிகாரி ராஜகோபால் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story