பழனி அருகே துணிகரம், லாரி டிரைவர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு


பழனி அருகே துணிகரம், லாரி டிரைவர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 16 Jun 2019 4:00 AM IST (Updated: 16 Jun 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். தூங்கி கொண்டிருந்த மகளிடமும் மர்மநபர்கள் கைவரிசை காட்டினர்.

பழனி,

பழனி அருகே பெரியகலையம்புத்தூர் பொன்நகரை சேர்ந்தவர் அன்ராஜ் (வயது 57). லாரி டிரைவர். இவருடைய மனைவி தமிழ்செல்வி (55). மகள் திவ்யா (27). நேற்று முன்தினம் அன்ராஜ் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று காலை திவ்யா எழுந்து பார்த்தபோது தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 7 பவுன் நகையும் திருடு போயிருந்தது

இதுகுறித்து பழனி தாலுகா போலீசுக்கு அன்ராஜ் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நள்ளிரவு வேளையில் மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே தகவலறிந்ததும் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் லிண்டா வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிதுதூரம் ஓடிபோய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி திருட்டு நடப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story