ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்- 48 பேர் கைது
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம்,
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாவட்ட நிர்வாக குழு வி.எம். சேகர் தலைமையில் நகர செயலாளர்கள் சிதம்பரம் தமிமுன் அன்சாரி, பரங்கிப்பேட்டை பாருக்அலி ஆகியோர் முன்னிலையில் சிதம்பரம் கஞ்சி தொட்டி பேருந்து நிறுத்தத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில நிர்வாக குழு மணிவாசகம், மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணை செயலாளர்கள் குளோப், காசிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேரை கைது செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story