கம்பத்தில், விதியை மீறி இயக்கும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்
கம்பத்தில் விதியை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கம்பம்,
தமிழகம், கேரளாவை இணைக்கும் நகரமாக கம்பம் விளங்குகிறது. இதனால் தமிழகம், கேரளாவை சேர்ந்த ஏராளமான வாகனங்கள் கம்பம் நகர் பகுதியை கடந்து செல்கின்றன. மேலும் கம்பத்திலிருந்து கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு ஏராளமான ஜீப்களில் கூலித்தொழிலாளிகள் வேலைக்கு செல்கின்றனர். இதனால் எப்போது பார்த்தாலும் கம்பம் நகர் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
இதனிடையே பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகர எல்லைக்குள் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்பால் மிக குறுகியதாகவும், நகர எல்லையை தாண்டி உள்ள சாலைகள் மிக அகலமாகவும் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இதைதவிர்க்கும் பொருட்டு கம்பத்தில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இருந்து காளியம்மன் கோவில் வரை உள்ள நகரின் பிரதான சாலையில் ஒரு வழிப்பாதை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேனி, குமுளி மார்க்கமாக கம்பம் புதியபஸ் நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து பஸ்களும் ஏ.கே.ஜி.திடல் வழியாக செல்கின்றன. இதே போல் தேனி, குமுளி மார்க்கமாக புதிய பஸ்நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் மாரியம்மன் கோவில், பழைய பஸ் நிலையம், சிக்னல் வழியாக சென்று வருகின்றன.
ஒரு வழிப்பாதை கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள் தென் புறத்தில் செல்வதற்கும், ஆட்டோ உள்பட அனைத்து வகை வாகனங்கள் வடபுறத்தில் செல்லும் வகையிலும் போக்குவரத்து போலீசார் சிக்னலில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை சாலையின் நடுவே இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர்.
ஆனால் போக்குவரத்து விதியை மீறி பஸ் செல்லக்கூடிய பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து விதியை மீறி இயக்கப்படும் ஆட்டோ மற்றும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story