தேனியில், கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
தேனியில் கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையத்தினை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தேனி,
தமிழக அரசின் உத்தரவின்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள 16 மின்பகிர்மான வட்டங்களில் ரூ.4 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின் தடை பழுது நீக்கும் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மதுரை மண்டலத்திற்குட்பட்ட தேனி மின்பகிர்மான வட்டத்திற்கு என பிரத்யேகமாக கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் தேனி மின்பகிர்மான வட்ட மத்திய அலுவலக வளாகத்தில் ரூ.25 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த மையத்தின் மூலம் தேனி மின்பகிர்மான வட்டத்தில் உள்ள தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், போடிநாயக்கனூர், ராசிங்காபுரம், தேவாரம், கோம்பை, கூடலூர், சுருளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 4 லட்சத்து 89 ஆயிரத்து 585 மின் இணைப்பு பயனீட்டாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி நேரடியாக தங்கள் மின்இணைப்பில் ஏற்படும் பழுதுகளை தெரிவித்து, அவற்றை விரைவாக சரி செய்து கொள்ளலாம். இந்த மையம் 24 மணிநேரமும் செயல்படும்.
தற்போது அனைத்து மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சி.யு.ஜி. சிம் கார்டு மின் வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளது. மின் தடை சம்பந்தமான புகார்கள் பழுது நீக்கும் மையத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் களப்பணியாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு, நுகர்வோருக்கு காலதாமதம் ஏற்படாத வண்ணம் மின் தடை நிவர்த்தி செய்யப்படும்.
எனவே, மின்தடை பற்றிய புகார்களை 24 மணி நேரமும் பதிவு செய்திட கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1912, 04546 1912 மற்றும் 04546 250031 ஆகிய எண்களை பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்கள் மின்இணைப்பு தொடர்பான புகார்களை உடனுக்குடன் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.tan-g-e-d-co.gov.in என்ற இணைய தளத்தினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்விழாவில், எம்.எல்.ஏ.க்கள் ஜக்கையன், மகாராஜன், சரவணக்குமார், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மதுரை மண்டல தலைமை பொறியாளர் கோல்டுவின் வில்லியம்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, தேனி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் உமாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர்கள் சகாயராஜ், லட்சுமி, மாறன்மணி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் நிருபர்கள் தமிழ்நாட்டின் குடிநீர் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய குடிநீர் திட்டங்கள் தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story