தேனி வாரச்சந்தை முன்பு சாலையோர வியாபாரிகள் மறியல்


தேனி வாரச்சந்தை முன்பு சாலையோர வியாபாரிகள் மறியல்
x
தினத்தந்தி 16 Jun 2019 3:45 AM IST (Updated: 16 Jun 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

தேனி வாரச்சந்தை முன்பு சாலையோர வியாபாரிகள் மறியல் செய்தனர்.

தேனி,

தேனியில் வாரந்தோறும் சனிக்கிழமை காய்கறி சந்தை கூடுகிறது. இந்த சந்தையில் காய்கறிகள் மட்டுமின்றி பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தேனி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 8-ந்தேதி (சனிக்கிழமை) போக்குவரத்து போலீசார், தெருவில் கடைகள் அமைப்பதால் தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று சாலையோர வியாபாரிகளை வாரச்சந்தைக்குள் கடை போட வலியுறுத்தினர். இதன்காரணமாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 10-ந்தேதி நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தேனி மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வாரச்சந்தை நடந்தது. அப்போது வியாபாரிகள் சாலையோரத்தில் கடை போடுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என கோரி திடீரென வாரச்சந்தை பகுதி முன்பு மறியல் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த தேனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, சாலையோரத்தில் தற்காலிகமாக கடைகள் அமைத்துக்கொள்ள அனுமதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியிலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story