நாமக்கல்லில் மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் மருந் தாளுனர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடு பட்டனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முரளி, இணைச் செயலாளர்கள் அன்பழகன், சாலை சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் கோபி கிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் மருந்தாளுனர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி 110 தாலுகா, தாலுகா அல்லாத ஆஸ்பத்திரிகளில் தலைமை மருந்தாளுனர் பணியிடம் உருவாக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்களை தட்டுபாடின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story