அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. ஆலோசனை குடிநீர் பிரச்சினையை விரைந்து தீர்க்க அறிவுறுத்தல்
நாமக்கல்லில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. ஆலோசனை நடத்தினார். அப்போது விரைவில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
நாமக்கல்,
நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆலோசனை நடத்தினார். இதில் வருவாய்த்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்பட அனைத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, கழிப்பிட வசதி, பயிர் காப்பீடு என பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துறை அலுவலர்களிடம் சின்ராஜ் எம்.பி. அறிவுறுத்தினார்.
கூட்டத்திற்கு பிறகு சின்ராஜ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களின் பிரச்சினைகள் தீர்ப்பதற்காக தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.
குடிநீர் பிரச்சினை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி என 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் இதுவரை வந்துள்ளன. அந்த மனுக்கள் குறித்து அனைத்துறை அதிகாரிகளுடன் கூறி உள்ளேன். அதில் ஒரு சில மனுக்கள் மீது உடனடியாகவும், ஒரு சில மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள்ளும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். குறிப்பாக குடிநீர் பிரச்சினை பிரதானமாக உள்ளது. எனவே விரைந்து குடிநீர் பிரச்சினையை தீர்க்கும்படி அதிகாரிகளிடம் கூறி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கொ.ம.தே.க. மாநில விவசாய அணி இணை செயலாளர் சந்திர சேகர், மாவட்ட செயலாளர் மாதேஷ்வரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story