வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகள் மனிதசங்கிலி


வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகள் மனிதசங்கிலி
x
தினத்தந்தி 16 Jun 2019 3:45 AM IST (Updated: 16 Jun 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.

அயோத்தியாப்பட்டணம், 

சேலம் அருகே உள்ள குப்பனூர் மலையடிவாரத்தில் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க வலியுறுத்தி நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்போம், பயிர்களை காக்க வேலி உடனே அமைத்திடு, நிலத்தை காப்போம், விவசாயத்தை காப்போம், விவசாயிகளை காப்போம் போன்ற வாசகங்களை கொண்ட அட்டைகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், பூவனூர், பெருமாபாளையம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் தர்மபுரி மாவட்டம், கோம்பூர், சின்ன மஞ்சவாடி, பெரிய மஞ்சவாடி, கல்லூத்துப்பட்டி, காளிப்பேட்டை ஆகிய பகுதிகளில் விளைநிலங்கள் வைத்துள்ள விவசாயிகள், வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் மிகுந்த கவலை அடைந்துள்ளோம்.

குறிப்பாக சேர்வராயன் வடக்கு, கல்வராயன் மலையில் உள்ள காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்குகள், மயில்கள், விவசாய பயிர்களை தின்று பெரிய அளவில் சேதத்தையும், பொருளாதார இழப்பையும் எங்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

எனவே காரைக்காடு முதல் பாப்பிரெட்டிப்பட்டி வரை சேர்வராயன், கல்வராயன் மலையையொட்டி வேலி அமைக்க வேண்டும். காட்டு விலங்குகள், பறவைகளுக்கு தேவையான உணவையும், தண்ணீரையும் வனப்பகுதிக்கு உள்ளேயே ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விவசாயிகள் நடத்திய மனிதசங்கிலி போராட்டம் சேலம் அருகே நேற்று திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story