செங்குன்றம் அருகே குளத்தில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் பலி
செங்குன்றம் அருகே குளத்தில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் திருவள்ளூவர் தெருவை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகன் சஞ்சய் (வயது 17). இவர் செங்குன்றம் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
நேற்று பகல் தனது நண்பர்கள் குமரவேல், அய்யப்பன், சந்தோஷ் ஆகியோருடன் செங்குன்றத்தை அடுத்த கிராண்ட் லைன் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சஞ்சய் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது சஞ்சய் திடீரென குளத்தில் இருந்த மூழ்கினார். அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. மாணவர் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சேற்றில் சிக்கிய சஞ்சயின் உடலை வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.