பேரூர் அருகே தனியார் தோட்டத்தில், சந்தன மரம் வெட்டி கடத்தல் - மர்ம நபர்கள் தொடர்ந்து கைவரிசை
பேரூர் அருகே தனியார் தோட்டத்தில் மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தினர். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-
பேரூர்,
கோவையை அடுத்த பேரூர் தென்கரை பேரூராட்சி சென்னனூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிச்சாமி (வயது 67). இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 5 ஆண்டுகள் வளர்ந்த சந்தன மரம் ஒன்று இருந்தது. அந்த தோட்டத்துக்கு அருகில் உள்ள வீட்டில் காளிச்சாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருடைய தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள், அங்கிருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றனர். காளிச்சாமி, நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற போது சந்தன மரம் வெட்டப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் மதுக்கரை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து காளிச்சாமி கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எனது தோட்டத்தில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். அது பற்றி வனத்துறையிடம் புகார் தெரிவித்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
தற்போது மர்மநபர்கள் மீண்டும் சந்தன மரத்தை வெட்டி கடத்தி தொடர்ந்து கைவரிசை காட்டி உள்ளனர். மரத்தின் அடிப்பகுதி மற்றும் மேல்மட்ட பகுதியை விட்டு விட்டு, 5 அடி உயரமுள்ள பகுதியை மட்டும் மின்வாளால் வெட்டி கடத்தி சென்று விட்டனர் என்றார்.
சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது குறித்து பேரூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மலை கிராமமாக உள்ளதால் உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தோட்டத்துக்குள் புகுந்து மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story