தமிழ்நாட்டில் எந்த பள்ளிக்கூடத்திலும் தண்ணீர் பற்றாக்குறை இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


தமிழ்நாட்டில் எந்த பள்ளிக்கூடத்திலும் தண்ணீர் பற்றாக்குறை இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 16 Jun 2019 4:15 AM IST (Updated: 16 Jun 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் எந்த பள்ளிக்கூடத்திலும் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

நம்பியூர், குருமந்தூர், கூடக்கரை, சாவக்காட்டுப்பாளையம், மலையம்பாளையம் உள்பட 12 அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி முன்னிலை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இதுவரை எந்த பள்ளிக்கூடத்திலும் குடிநீர் பற்றாக்குறை என்ற தகவல் எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. இதுபோன்ற நிலையில் உள்ள பள்ளிகள் குறித்து தகவல் வந்தால், 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும்.

பள்ளிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறைக்கு தேவையான தண்ணீர் போன்றவற்றை பெற்றோர் ஆசிரியர் சங்க பணத்தில் இருந்து போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிக்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 37 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகள், 6 ஆயிரத்து 200 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

மேலும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து வருகிற 17-ந் தேதி முதல் (திங்கட்கிழமை) அனைத்து பள்ளிகளிக்கூடங்களிலும் ஆய்வு பணிகள் நடைபெறும். காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளிக்கு விடுமுறை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று (அதாவது நேற்று) விடுமுறை தினம் என்பதால் தான் விடுமுறை விடப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் விடுமுறை விடப்படவில்லை. மாணவர்களுக்கு தேசபக்தியோடும், பெற்றோரை நேசிக்கவும், கல்வியோடு ஒழுக்கத்தை கற்றுத்தரவும் வாரத்தில் ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்டும்.

பெண் குழந்தைகளை பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க, மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு குழுவினருடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் லயோலா கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது. இதில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 11 வகையான பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் இந்த பயிற்சி பள்ளிக்கூடங்களில் வாரத்தில் ஒருநாள் அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் எந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியரை நியமிக்கலாம். ெவளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழே தெரியாமல் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது தமிழ் பாடம் படித்து இருக்க வேண்டும் என்ற சான்றிதழ் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது அரசு மிகவும் நிதி நெருக்கடியில் உள்ளது எனினும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் எதுவும் நிறுத்தப்படமாட்டாது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டுவரப்படும்.

ரூ.1,538 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்காக 5 நீரேற்று நிலையங்கள் பவானி, நசியனூர், பெருந்துறை, வரப்பாளையம் மற்றும் கோவை மாவட்டம் அன்னூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளது. வரப்பாளையத்தில் அமைய உள்ள நீரேற்று நிலையத்துக்கான மண்பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story