உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல் அடக்கம்
உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராதாமணி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இவருடைய உடல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது சொந்த ஊரான விழுப்புரம் அருகே உள்ள கலிஞ்சிக்குப்பம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அரசு சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலரும் ராதாமணி எம்.எல்.ஏ.வின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து நேற்று அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கவுதமசிகாமணி, சுதர்சனன், ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி மஸ்தான், மாசிலாமணி, உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், சீத்தாபதி சொக்கலிங்கம், ராணிபேட்டை காந்தி, ஆர்.டி.சேகர் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் ராதாமணி எம்.எல்.ஏ.வின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கலிஞ்சிக்குப்பத்தில் அவருடைய சொந்த நிலத்தில் உள்ள வள்ளலார் ராமலிங்கம் சுவாமிகள் கோவில் அருகில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story