6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை படிக்கும் மாணவர்கள், தமிழ் மொழியிலேயே தேசிய அறிவியல் திறனாய்வு தேர்வை எழுதலாம்
6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியிலேயே தேசிய அளவிலான அறிவியல் திறனாய்வு தேர்வை எழுதலாம். இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
உடுமலை,
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி. இணைந்து தேசிய அளவிலான அறிவியல் திறனாய்வு தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்ப்பதோடு அறிவியலில் ஆராய்ச்சி துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவே இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் நவம்பர் மாதம் 24-ந்தேதி, 30-ந்தேதி ஆகிய 2 நாட்கள் இணைய வழியில் நடைபெறுகிறது. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் இந்த தேர்வு நடைபெறுகிறது. தேர்வை ஆங்கிலம் தவிர, தமிழ், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுதலாம்.
தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே தேர்வு நடைபெறும். தேர்வு கட்டணம் ரூ.100 ஆகும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் மாதம் 15-ந்தேதி ஆகும். 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம். 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 முதல் 11 வரை மற்றொரு பிரிவுவாகவும் தேர்வு நடைபெறும்.
www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 மாணவர்கள் இருந்தால் பள்ளியே தேர்வு மையமாக அமைக்கப்படும். தனித்தேர்வர்கள் ஜூலை 15-ந்தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணவர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணவர்களுக்கு பள்ளி அளவிலான சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவில் (6 முதல் 11-ம் வகுப்பு வரை) ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் 2-ம் கட்ட தேர்வுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
இந்த தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும். இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும். 120 மாணவர்களில் வகுப்புக்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். தேசிய அளவிலான முகாமிற்கு தேர்ந்தெடுப்பவர்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்படும். தேசிய அளவிலான தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என ரொக்க பரிசு வழங்கப்படும்.
இது போன்ற தேர்வுகள் மாணவர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்கள் எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்.
இந்த தகவலை வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்தார்.
Related Tags :
Next Story