வயலுக்கு செல்லும் பாதை பிரச்சினையில் தகராறு பெண்ணை தாக்கிய விவசாயி கட்டையால் அடித்துக்கொலை ஆரணி அருகே பயங்கரம்
ஆரணி அருகே வயலுக்கு செல்லும் பாதை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய விவசாயி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
ஆரணி,
பரபரப்பான இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆரணி அருகே உள்ள களம்பூரை அடுத்த எட்டிவாடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). விவசாயி. இவரது விவசாய நிலத்தையொட்டி அதே ஊரை சேர்ந்த கருப்பன் என்ற தஞ்சியப்பனுக்கு (50) நிலம் உள்ளது. கண்ணன் அவரது நிலத்துக்கு செல்வதற்கு தஞ்சியப்பன் நிலத்தையொட்டிய பாதையில்தான் செல்ல வேண்டும். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணன் தனது நிலத்துக்கு சென்று கொண்டிருந்தார். தஞ்சியப்பனின் நிலம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த தஞ்சியப்பனின் மனைவி பவானி, ஏன் இந்த பாதையில் வருகிறாய், எத்தனை முறை சொன்னாலும் திருந்தமாட்டாயா? என கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கண்ணன், தான் வைத்திருந்த கட்டையால் பவானியை தாக்கிவிட்டு சென்று விட்டார்.
இது குறித்து பவானி தனது கணவர் தஞ்சியப்பனுக்கு தெரிவிக்கவே அவர் நிலத்துக்கு விரைந்து வந்தார். தனது மனைவியை தாக்கிய கண்ணன் இந்த வழியாகத்தானே வர வேண்டும். அப்போது பார்த்துக்கொள்வோம் என தயாராக காத்திருந்தார். இந்த நிலையில் நிலத்துக்கு சென்ற கண்ணன், வீட்டிற்கு திரும்புவதற்காக தஞ்சியப்பன் நிலத்தின் அருகே உள்ள பாதை வழியாக வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவரை மறித்த தஞ்சியப்பன் எப்படி எனது மனைவியை தாக்கலாம் என்று கேட்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தஞ்சியப்பன், தான் வைத்திருந்த கட்டையால் கண்ணனின் நெஞ்சுப்பகுதியில் பயங்கரமாக தாக்கினார். இதில் கண்ணன் சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே இறந்து விட்டார். பின்னர் தஞ்சியப்பன் தப்பிவிட்டார்.
கண்ணன் கொலை செய்யப்பட்டதையறிந்த அவரது மகன் சாமி பதறியவாறு ஓடிவந்தார். அது குறித்து அவர் களம்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கண்ணனால் தாக்கப்பட்ட தஞ்சியப்பனின் மனைவி பவானி சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டபின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து கண்ணனின் மகன் சாமி அளித்த புகாரின்பேரில் விவசாயி தஞ்சியப்பனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story