ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்த காசிமேடு மீனவர்கள் 7 பேர் மாயம்


ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்த காசிமேடு மீனவர்கள் 7 பேர் மாயம்
x
தினத்தந்தி 17 Jun 2019 4:30 AM IST (Updated: 16 Jun 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காசிமேடு மீனவர்கள் 7 பேர் மாயமாகினர். கடலோர காவல்படையினர் அவர்களை தேடி வருகிறார்கள்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு காசிபுரத்தை சேர்ந்தவர் நந்தன் (வயது 65). இவருடைய பைபர் படகில் கடந்த 4-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் புகழேந்தி (59), கே.மதி(59), ஸ்டீபன்(32), பால்ராஜ்(50), துரை(55), கருத்தக் கண்ணு (65), மதி (50) ஆகிய 7 பேர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

துறைமுகத்தில் இருந்து 25 கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன் பிடித்தனர். கடந்த 10-ந்தேதி கரை திரும்பி வர வேண்டிய இந்த மீனவர்கள் வரவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்தனர்.

மீனவர்கள் மாயமானது குறித்து படகு உரிமையாளர் நந்தன் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் மீன்பிடி துறைமுக போலீசிலும், காசிமேடு மீன்துறை உதவி இயக்குனர் வேலனிடமும் நேற்றுமுன் தினம் புகார் அளித்தனர்.

இதையடுத்து கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே காசிமேடு மீனவர்கள் சென்ற பைபர் படகு மட்டும் ஆந்திர கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. எனவே மீனவர்கள் ஆந்திரப்பகுதியில் மீன்பிடித்து இருக்கலாம் என்று தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து ஆந்திர மாநில மீனவர்கள் உதவியுடன் காசிமேடு மீனவர்களை கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.

Next Story