சென்னையில் விஸ்வரூபம் எடுக்கும் குடிநீர் பிரச்சினை; போலீஸ் பாதுகாப்புடன் தண்ணீர் வினியோகம்


சென்னையில் விஸ்வரூபம் எடுக்கும் குடிநீர் பிரச்சினை; போலீஸ் பாதுகாப்புடன் தண்ணீர் வினியோகம்
x
தினத்தந்தி 17 Jun 2019 5:00 AM IST (Updated: 16 Jun 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், குடிநீர் வினியோகம் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தண்ணீர் கிடைக்கும் இடங்களை தேடி இரவு பகலாக அலைகின்றனர்.

சென்னை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு விட்டன. இதனால் சென்னை மாநகர பொதுமக்களுக்கு கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், வீராணம், நெய்வேலி நீர்ப்படுகை, தாமரைப்பாக்கம் மற்றும் மீஞ்சூரில் உள்ள விவசாய கிணறுகள், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இருப்பினும் பெரும்பாலான வீடுகளில் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து லாரிகளில் தண்ணீர் பெற முடிவு செய்து பலர் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் அவர்களுக்கும் சரியான நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்ற குறையும் பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. மாநகரில் உள்ள கோவில் தெப்பக்குளங்களும் வறண்டு விட்டன.

இதனால் சென்னை மாநகரில் இரவு பகல் என்று பார்க்காமல் வாகனங்களில் குடும்பத்துடன் குடங்கள், பிளாஸ்டிக் கேன்களை எடுத்து கொண்டு தண்ணீரை தேடி பொதுமக்கள் அலைவதை காணமுடிகிறது. பெரும்பாலும் மாநகரில் லாரிகளில் தண்ணீர் நிரப்பப்படும் நீரேற்று நிலையங்கள் உள்ள வள்ளுவர் கோட்டம், அண்ணாமலை நகர், கீழ்ப்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் குடிநீர் பிடித்து செல்கின்றனர்.

அவ்வாறு தண்ணீர் பிடிக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு இடையேயும், லாரி டிரைவர்களுக்கிடையேயும் வாய்த்தகராறு மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

குறிப்பாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்களை முறைப்படுத்தி தண்ணீர் வினியோகம் செய்யும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னை மாநகரில் குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 15 மண்டலங்களின் கீழ் 34 ஆயிரத்து 173 தெருக்கள் உள்ளன. இவற்றில் 2,484 தெருக்களில் தண்ணீர் வரவில்லை என்று கண்டறியப்பட்டு உள்ளது. பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தண்ணீர் வராத தெருக்களுக்கு 24 ஆயிரம், 16 ஆயிரம், 9 ஆயிரம், 6 ஆயிரம் மற்றும் இரட்டை தொட்டிகள் அடங்கிய சிறிய மற்றும் பெரிய வகை தண்ணீர் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னை மாநகரில் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 150 முதல் 193 நாட்கள் வரை மழை பெய்யவில்லை. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு தான் தொடர்ந்து 191 நாட்கள் மழை பெய்யவில்லை. கடந்த 2003-ம் ஆண்டு அதிகபட்சமாக 200 நாட்கள் வரை மழை பெய்யாமல் இருந்துள்ளது.

அதேபோல் 2015-ம் ஆண்டு வந்த புயலுக்கு முன்பாக கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 29-ந்தேதியில் இருந்து 2015-ம் ஆண்டு ஜூலை 10-ந்தேதி வரை தொடர்ச்சியாக 193 நாட்கள் மழை பெய்யவில்லை. இந்த ஆண்டும் தொடர்ந்து எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. அடுத்த வாரமும் மழை பெய்யவில்லை என்றால் 2003 மற்றும் 2015-ம் ஆண்டுகளை போல அதிக நாட்கள் இந்த ஆண்டும் மழை பெய்யவில்லை என்றாகி விடும்.

திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளுக்கு நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் திருவான்மியூர் கலாஷேத்திரா சாலையில் இணையதள சேவைக்கான கேபிள் பதிப்பதற்காக சாலையை ராட்சத கருவிகள் மூலம் சிலர் நேற்று அதிகாலை தோண்டினர்.

அப்போது குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் குடிநீர் வாரிய அதிகாரிகள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் திருவான்மியூர், அடையாறு, இந்திரா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நேற்று குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. இதனால் அப்பகுதியினரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Next Story