பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி, மர்மநபருக்கு வலைவீச்சு


பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி, மர்மநபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Jun 2019 4:00 AM IST (Updated: 16 Jun 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் தப்பி ஓடினார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆவடி,

ஆவடி அடுத்த பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகில், சி.டி.எச். சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் பொதுமக்கள் வசதிக்காக அப்பகுதியில் ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தின் கதவை திறந்து உள்ளே சென்று ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வீட்டிற்கு சென்ற ஒருவர் அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருப்பதை பார்த்து பட்டாபிராம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்த மர்ம நபர் கதவை திறந்து வெளியில் வந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.

அப்பொழுது போலீசுக்கு தகவல் கொடுத்தவர் மர்ம நபரை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அந்த மர்ம நபர் பிடிக்க வந்தவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரின் உருவத்தை வைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரின் வயது 25 லிருந்து 30 வயது இருக்கும் என்றும், பார்ப்பதற்கு வடமாநில வாலிபரை போல் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story