திருவள்ளூர் அருகே வியாபாரிக்கு கத்திக்குத்து; 5 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே வியாபாரிக்கு கத்திக்குத்து; 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 Jun 2019 3:30 AM IST (Updated: 16 Jun 2019 11:53 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பன்றி வியாபாரியை கத்தியால் குத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெங்கல் அருகே உள்ள உத்தரபாளையத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 29). பன்றி வியாபாரி. இந்த நிலையில் ராமஞ்சேரி பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் என்கிற பாபா (22), அருள் (23), தினேஷ் (25), கார்த்திக், கோபி (24) ஆகியோரும் தேவேந்திரனிடம் பன்றிகளை அதிக விலைக்கு விற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தேவேந்திரனிடம் தங்களை தவிர வேறு யாரிடமும் பன்றியை வாங்க கூடாது என கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவேந்திரன் திருவள்ளூரை அடுத்த குன்னவலம் பகுதியில் உள்ள ஏரி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த மேற்கண்ட 5 பேரும் தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு தேவேந்திரனை வழிமறித்து தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்து கத்தியால் குத்தி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த தேவேந்திரன் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து தேவேந்திரன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கமலக்கண்ணன், அருள், தினேஷ், கார்த்திக்,கோபி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story