கம்பம் அருகே வன ஊழியர்களின் சேதமடைந்த குடியிருப்பு அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கம்பம் அருகே வன ஊழியர்களின் சேதமடைந்த குடியிருப்பு அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 17 Jun 2019 3:45 AM IST (Updated: 17 Jun 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே வனஊழியர்களின் குடியிருப்பு சேதமடைந்து பயன்படாத நிலையில் உள்ளது. அதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கம்பம்,

தேனி மாவட்டத்தில் கம்பம் மேற்கு, போடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய வனச்சரகங்கள் இயற்கை வனக்கோட்டமாகவும், கூடலூர், கம்பம் கிழக்கு, சின்னமனூர், வருசநாடு, கண்டமனூர், மேகமலை உள்ளிட்ட 6 வனச்சரகங்கள் மேகமலை வன உயிரின சரணாலயமாகவும் உள்ளன. இந்த வனப்பகுதியில் தேக்கு, சந்தனம், தோதகத்தி உள்ளிட்ட அரிய வகை மரங்களும், யானை, சிறுத்தை, காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள், மர அணில், சிங்கவால் குரங்கு, மான் உள்ளிட்ட வன விலங்குகளும், அரியவகை மூலிகைகளும் உள்ளன.

இந்த வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வனவிலங்குகளை வேட்டையாடுவதையும், விலையுயர்ந்த மரங்களை வெட்டுவதை தடுக்கவும் கண்காணிக்கவும் வனச்சரகப்பகுதிகள் எல்லைகளாக பிரிக்கப்பட்டது. இங்கு வனத்துறையின் மூலம் ரோந்து செல்லும் வன ஊழியர்களுக்கு நாராயணதேவன்பட்டியில் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டன. இது கடந்த 50 வருடங்களுக்கு முன்பே வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்தது.

இதையடுத்து வன ஊழியர்கள் அந்த குடியிருப்பில் தங்காமல் வேறு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். இதையடுத்து அந்த கட்டிடத்திற்கு அருகிலேயே வன ஊழியர்கள் தங்குவதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதில் தற்போது வன ஊழியர்கள் தங்கி வருகின்றனர். ஆனால் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடம் அகற்றப்படவில்லை. இந்த கட்டிடத்தின் முன்புறத்தில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. மேலும் அந்த கட்டிடத்தின் அருகே சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். அவர்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும். எனவே சேதமடைந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story