போதிய மழை இல்லாததால் 33 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்


போதிய மழை இல்லாததால் 33 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2019 4:15 AM IST (Updated: 17 Jun 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் வைகை அணையின் நீர்மட்டம் 33 அடியாக குறைந்துள்ளது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதுமான மழை பெய்யாத நிலையில், அணைக்கான நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது.

அணையில் இருப்பு உள்ள தண்ணீரை மதுரை மாவட்டம், சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் தேனி கூட்டுக்குடிநீர் திட்டம், ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு வினாடிக்கு 60 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

நீர்வரத்து இல்லாத காரணத்தால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 33 அடியாக குறைந்தது. வைகை அணையில் 15 அடி வரையில் வண்டல் மண் படிந்துள்ளதால் தற்போது மிகவும் குறைந்த அளவு தண்ணீரே இருப்பு உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழையும் போதுமான அளவு பெய்யவில்லை.

வைகை அணைக்கு இக்கட்டான நிலையில் கைகொடுக்கும் முல்லைப்பெரியாறு அணையிலும் போதுமான நீர்இருப்பு இல்லை. நீர்வரத்தே இல்லாத நிலையில் வைகை அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் அதனை நம்பியுள்ள மதுரை மாநகரத்தில் குடிநீர் வினியோகம் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 42 அடியாகயும் நீர்வரத்து வினாடிக்கு 971 கனஅடியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 33.01 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 501 மில்லியன் கனஅடியாக இருந்தது.

Next Story