திருவாரூர் அருகே பரபரப்பு: கொள்ளையடிக்க வரமறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து


திருவாரூர் அருகே பரபரப்பு: கொள்ளையடிக்க வரமறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 17 Jun 2019 3:45 AM IST (Updated: 17 Jun 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே கொள்ளையடிக்க வரமறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரடாச்சேரி,

திருவாரூர் அருகே உள்ள பெருமாளகரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது27). இவருடைய நண்பர், வடக்குமாங்குடியை சேர்ந்த சக்திவேல் (29). இவர்கள் இருவர் மீதும் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களை சேர்ந்த கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் மனைவி கர்ப்பமாக உள்ளார். மனைவிக்கு குழந்தை பிறக்கும் வரை கொள்ளையடிக்க செல்வதில்லை என விஜய் முடிவு செய்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சக்திவேல், விஜய்யை கொள்ளையடிக்க அழைத்துள்ளார். இதற்கு விஜய் மறுத்துள்ளார்.

கத்திக்குத்து

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று சக்திவேல் மற்றும் அவருடைய நண்பர்கள் சென்னை வடபழனியை சேர்ந்த விக்னேஷ் (27), கொரடாச்சேரி அருகே உள்ள பருத்தியூரை சேர்ந்த விக்னேஷ் (22), வெண்ணவாசலை சேர்ந்த சுரேஷ் (24), பட்டுக்கோட்டையை சேர்ந்த பிரபா (27) ஆகிய 5 பேரும் சேர்ந்து விஜய்யை கத்தியால் சரமாரியாக குத்தினர்.

இதனை தடுக்க வந்த விஜய்யின் நண்பர் அரவிந்த் (28) என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த விஜய், அரவிந்த் ஆகிய 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வலைவீச்சு

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விஜய் கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சக்திவேல் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் சென்னை வடபழனியை சேர்ந்த விக்னேசை கைது செய்தனர். மற்ற 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளையடிக்க வரமறுத்த வாலிபர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story