கோவில்பட்டி அருகே விபத்தில் சிக்கிய மினிலாரியில் ரூ.7 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 வாலிபர்கள் கைது
கோவில்பட்டி அருகே விபத்தில் சிக்கிய மினிலாரியில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி,
சேலத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலைக்கு நேற்று முன்தினம் காலையில் ஒரு மினிலாரி சென்று கொண்டு இருந்தது. அந்த மினி லாரி கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் சர்வீஸ் சாலையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காயம் அடைந்த மினி லாரி டிரைவரான கோவில்பட்டி புதுகிராமத்தை சேர்ந்த தனசேகரன் மகன் சந்தோஷ்குமார் (வயது 23), அவருடன் வந்த சீர்காழியை சேர்ந்த கார்த்திக் (27) ஆகியோரை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் அந்த மினி லாரியில் கொண்டு வரப்பட்ட காய்கறிகளை சோதனை செய்தனர். அங்கு 50-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
பின்னர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார். இதனையடுத்து போலீசார் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பிய சந்தோஷ்குமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
Related Tags :
Next Story