ஆரியங்காவு பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ஆரியங்காவு பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
செங்கோட்டை,
தமிழக- கேரள மாநில எல்லை பகுதியான ஆரியங்காவு வனப்பகுதியில் பாலருவி உள்ளது. இது சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலமாகும். இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான யானை, மான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவை அடிக்கடி தண்ணீர் அருந்துவதற்காக இந்த அருவி பகுதிக்கு வந்து செல்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினர் இந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர்.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பாலருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாலருவிக்கு செல்ல நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறியவர்களுக்கு ரூ.30-ம், பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு ரூ.25-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மீறி கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பாலருவியில் மகிழ்ச்சியாக குளித்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story