வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் 200 பனைவிதைகள் நடும் பணி; கவர்னர் தொடங்கி வைத்தார்
புதுவை வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் 200 பனைவிதைகள் நடும் பணியை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின் போது தூய்மைக்கும், நிலத்தடி நீர் சேமிப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் இந்த ஆய்வு பணியை நிறுத்தி வைத்திருந்தார்.
தற்போது கவர்னர் கிரண்பெடி மீண்டும் வார இறுதி நாட்களில் ஆய்வு பணியை தொடங்கியுள்ளார். இதில் ‘பசுமை புதுவை’ என்ற திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் ஆய்வு செய்து வருகின்றார்
இந்த நிலையில் நேற்று காலை கவர்னர் கிரண்பெடி கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அவர் அம்பேத்கர் சாலை, கடலூர் ரோடு வழியாக வேல்ராம்பட்டு ஏரிக்கரைக்கு சென்றார். அப்போது அவருடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பலர் உடன் சென்றனர். அங்கு அவர் ஏரிக்கரையை வலுப்படுத்தும் வகையில் 200 பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் கடந்த ஆண்டு அங்கு நட்ட மரக்கன்றுகள் எவ்வாறு வளர்ந்துள்ளது என்று ஆய்வு செய்தார். அப்போது அந்த மரக்கன்றுகள் நல்ல நிலையில் வளர்ந்து இருப்பது தெரியவந்தது. இதனை பார்த்த உடன் மகிழ்ச்சியடைந்த இவர் வனத்துறையினருக்கும், அந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி அங்கு கவர்னர் மாளிகை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்த ஆண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் விதைகளை நடும் தனி நபர் குழுக்களுக்கு ‘பசுமை புதுவை’ என்று அழைக்கப்படும் நன்றி கடிதங்களை வழங்க வேண்டும் என்றும், அந்த குழுவை தேர்வு செய்யும் பணியை மேற்கொள்ள ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி தேவராஜ் தலைமையிலான குழு அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அப்போது மரக்கன்றுகளை நடும் தன்னார்வலர்களுக்காக ‘பசுமை புதுவை’ என்ற தலைப்பில் வாட்ஸ்–ஆப் குழு ஒன்றை தொடங்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. ஆய்வுக்கு பின்னர் கவர்னர் கிரண்பெடி சைக்கிளில் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.