புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் நிதி அளிப்பார் - நாராயணசாமி நம்பிக்கை


புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் நிதி அளிப்பார் - நாராயணசாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 17 Jun 2019 5:00 AM IST (Updated: 17 Jun 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலத்தின் வளர்சிக்கு பிரதமர் மோடி நிச்சயம் நிதி உதவி அளிப்பார் என முதல்-அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்- அமைச்சர் நாராயணசாமி காரைக்கால் வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

நான் புதுடெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்துப் பேசினேன். அப்போது பிரதமரிடம் பேசும்போது புதுச்சேரி மாநில நிர்வாகம் மற்றும் நிதிநிலை சம்பந்தமாக எடுத்துக்கூறினேன். புதுச் சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

புதுச்சேரி அரசு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியுள்ளது. அதற்கான நிதி ஆதாரத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். 15-வது நிதிக்குழுவில் புதுச்சேரியை இணைக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உற்பத்தியாகின்ற பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு செல்கின்றன. புதுச்சேரியில் விற்கப்படுவதில்லை. ஆனால் பாதிக்கப்படுவது புதுச்சேரி மாநில அரசு.

அந்த பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வரி முழுவதும் மற்ற மாநிலங்களுக்கு செல்கிறது. அதை சரி செய்வதற்கு வரியை சமமாகப் பிரித்து உற்பத்தி செய்யப்படும் மாநிலத்திற்கும், நுகரும் மாநிலத்திற்கும் வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கையை பிரதமர் கவனமாகக் கேட்டு கொண்டார். மேலும் நிதி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதி ஆதாரத்தை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும், நிதி ஆயோக் கூட்டத்திலும் இது தொடர்பாக வலியுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Next Story