இளையான்குடி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வரும் அவலம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


இளையான்குடி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வரும் அவலம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 8:05 PM GMT)

இளையான்குடியில் பல்வேறு பகுதியில் தொடர்ந்து காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வருவதால் அவற்றை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இளையான்குடி,

தமிழகத்தில் இந்த வருடம் பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் தற்போது கடுமையாக குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பருவமழை பெய்யாததால் தமிழகத்தில் குளம், ஆறு, ஊருணி, ஏரி, கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகின்றன.

தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னையில் தற்போது கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருவதால் ஐ.டி. கம்பெனிகளில் பணியாற்றும் அலுவலர்கள் அலுவலகத்திற்கு வராமல் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்று அந்த கம்பெனிகள் உத்தரவிட்டுள்ளன. இதுதவிர அங்குள்ள ஓட்டல்களில் தண்ணீர் பஞ்சம் காரணமாக மதிய உணவு விற்பனை நிறுத்தப்பட்டு வருகிறது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பொதுவாக வறட்சி மாவட்டமாகவே இருந்து வருகிறது. இந்த 2 மாவட்டங்களில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவமழை நன்கு பெய்தால் மட்டுமே இந்த மாவட்டங்களில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஓரளவு நிவர்த்தியடையும். ஆனால் இந்த ஆண்டு மழை பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

இந்தநிலையில் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு அதற்காக திருச்சி மாவட்டத்தில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் குடிதண்ணீர் கொண்டு வரப்பட்டு இந்த 2 மாவட்ட மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இந்த பகுதிகளில் ஓரளவு குடிதண்ணீர் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டு வருகிறது. இளையான்குடி பகுதி வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் செல்கிறது. இதையடுத்து இந்த குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறும் குடிதண்ணீர் வீணாகி அருகில் உள்ள வயல்கள், கண்மாய்களில் தேங்கி வருகிறது.

கடந்த சில நாட்களாக இளையான்குடி அருகே உள்ள வாணி என்ற இடத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி அருகில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் கண்டு கொள்ளாமலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.

மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் பராமரிப்பு பணியாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் சம்பள பணம் பாக்கி உள்ளது. அதனால் பணிக்கு செல்லவில்லை, நாங்கள் வேலைக்கு சென்றால் தான் உடைப்பை சரிசெய்ய முடியும் என்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி இந்த பகுதியில் தொடர்ந்து குடிதண்ணீர் வீணாகி வருவதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story