மகனுக்கு திருமணமான 3 நாட்களில் துயர சம்பவம் மனைவியை உலக்கையால் தாக்கி கொன்ற விவசாயி
மலகாலமூரு தாலுகாவில், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் விவசாயி ஒருவர் தனது மனைவியை உலக்கையால் தாக்கி கொலை செய்தார். அவருடைய மகனுக்கு திருமணமான 3 நாட்களில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு,
இந்த விபரீத சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சித்ரதுர்கா மாவட்டம் மலகாலமூரு தாலுகா கொனசாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சய்யா. விவசாயி. இவரது மனைவி சாரதம்மா. இவர்களுடைய மகன் ரமேஷ். இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 2-வது நாளில் ரமேஷ், தனது மனைவியுடன் மாமியாரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுவிட்டார்.
இதனால் மஞ்சய்யாவும், சாரதம்மாவும் வீட்டில் தனியாக இருந்தனர். இந்த நிலையில் மஞ்சய்யாவுக்கும், சாரதம்மாவுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மஞ்சய்யா வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து தனது மனைவி சாரதம்மாவை சரமாரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த சாரதம்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தார்.
இதையடுத்து மஞ்சய்யா தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி மலகாலமூரு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சாரதம்மாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மஞ்சய்யா, தனது மனைவி சாரதம்மாவை கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சாரதம்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மஞ்சய்யாவை வலைவீசி தேடிவருகிறார்கள். மகனுக்கு திருமணம் முடிந்து 3 நாட்களில் தனது மனைவியை விவசாயி ஒருவர் கொலை செய்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story