பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது முதல்-மந்திரி அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது. முன்னதாக நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
மும்பை,
மராட்டியத்தில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கு ஆளும் கட்சியான பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்தநிலையில் 4 மாதங்களே ஆட்சிப்பொறுப்பில் இருக்கப்போகும் பா.ஜனதா கட்சி நேற்று திடீரென அதிரடியாக மந்திரி சபையை விரிவாக்கம் செய்தது. மேலும் 6 மந்திரிகளை பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் கூட இல்லாத நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜனதா அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.
இந்தநிலையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு வழக்கமாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசால் நடத்தப்படும் தேநீர் விருந்து நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கூறியதாவது:-
இந்த சட்டசபை கூட்டத்தொடரில் விதைப்பு மற்றும் அறுவடை தேவைகளுக்காக விவசாயிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி வழங்கவேண்டும் என வலியுறுத்துவோம். அதேபோல் முழுமையான பயிர்க்கடன் மற்றும் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைப்போம்.
அரசு கொண்டுவந்த பயிர்க்கடன் தள்ளுபடி, ஸ்மார்ட் சிட்டி, இடஒதுக்கீடு என அனைத்து வளர்ச்சி திட்டங்களும் வெறும் கானல் நீராகவே உள்ளது.
மேலும் 6 மாநில மந்திரிகள் நீக்கப்பட்டுள்ளது ஆட்சியில் ஊழல் நடந்திருப்பதை உறுதிபடுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story