மித்தி நதியை தூய்மைப்படுத்தும் பணி 2 ஆண்டுகளில் முடிவடையும் ஆதித்ய தாக்கரே தகவல்


மித்தி நதியை தூய்மைப்படுத்தும் பணி 2 ஆண்டுகளில் முடிவடையும் ஆதித்ய தாக்கரே தகவல்
x
தினத்தந்தி 17 Jun 2019 4:15 AM IST (Updated: 17 Jun 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

மித்தி நதியை தூய்மைப் படுத்தும் பணி 2 ஆண்டுகளில் முடிவடையும் என ஆதித்ய தாக்கரே கூறினார்.

மும்பை,

மும்பையில் கடந்த 2005-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. டெங்கு காய்ச்சலால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அசுத்தமான மித்தி நதியால் டெங்கு கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி காய்ச்சல் பரவியது தெரியவந்தது.

இதையடுத்து மித்தி நதியை தூய்மைப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. எனினும் பல ஆண்டுகளாக அந்த திட்டம் முடிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மித்தி நதியை ரூ.650 கோடி செலவில் 4 கட்டங்களாக தூய்மைப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது.

இதில், முதல் கட்டமாக ரூ.21.90 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பணியை சுவிடன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்த திட்டத்துக்கு சமீபத்தில் மாநகராட்சி நிலைக்குழு ஒப்புதல் அளித்து இருந்தது.

இந்தநிலையில் இதுகுறித்து சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கூறியதாவது:-

கடந்த 2005-ம் ஆண்டு முதல் மாநகராட்சி சிவசேனா வசம் இருந்த போதும், 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் மாநிலத்தை ஆட்சி செய்தது. அவர்கள் மித்தி நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தனர்.

தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. எனவே மித்தி நதியை முழுமையாக தூய்மைப்படுத்தும் பணி இன்னும் 2 ஆண்டுகளில் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story