நாமக்கல் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்


நாமக்கல் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 17 Jun 2019 4:30 AM IST (Updated: 17 Jun 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள வீசாணம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஒரு மின்மாற்றியில் இருந்து மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்மாற்றியின் குதிரைதிறன் போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.கடந்த ஒரு வாரமாக மின்தடை அதிகமாக இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் மின்சார வினியோகம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று இரவு வீசாணம் பஸ்நிறுத்தம் அருகே திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடுதல் மின்மாற்றி

இது குறித்து அவர்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மின்தடையால் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடியவில்லை. குடிப்பதற்கும் சீராக குடிநீர் கிடைப்பது இல்லை. தற்போது உள்ள மின்மாற்றி மிகவும் குறைந்த குதிரைதிறன் கொண்டதாக உள்ளது. எனவே கூடுதலாக ஒரு மின்மாற்றி அமைத்து அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story