சாரம் சரிந்து விழுந்தது; 3 பேர் பலி மீட்கப்பட்ட 17 பேருக்கு தீவிர சிகிச்சை
பெங்களூருவில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கான தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியின்போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் பலியானார்கள். மீட்கப்பட்ட 17 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு,
பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் லும்பினி கார்டன் ஜோகப்பா லே-அவுட் உள்ளது. இங்கு பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கான தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு வெளிமாநிலத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பணி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று ஒரு தண்ணீர் தொட்டியின் மேற்புறம் கான்கிரீட் போடுவதற்கு வசதியாக இரும்பு கம்பிகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலையில் இரும்பு கம்பிகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியின் உள்ளே 20 தொழிலாளர்கள் பணி செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்தன.
இதனால் அங்கு பணி செய்தவர்கள் இரும்பு கம்பிகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் இறந்திருந்து தெரியவந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும் இடிபாடுகளில் சிக்கிய 17 பேர் மீட்கப்பட்டனர். இதில் 11 பேர் படுகாயமும், 6 பேர் காயமும் அடைந்து இருந்தனர். இதையடுத்து 17 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதில் 6 பேர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பலியான 3 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த 3 பேரின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக போலீசார் பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வளர்ச்சி வாரிய பணியை குத்தகை எடுத்துள்ள குத்தகைதாரர் மற்றும் 7 என்ஜினீயர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் கிராம வளர்ச்சித்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். பின்னர் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா அளித்த பேட்டியில், ‘இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததில் 3 பேர் இறந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயம், படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவுகளை அரசே ஏற்கும்’ என்றார்.
இதுபற்றி பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரிய தலைவர் துசார் கிரிநாத் கூறுகையில், ‘சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அலட்சியம் காட்டிய பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story