அரசியல் சாசனப்படி போலீஸ்காரர்கள் தங்கள் கடமையை செய்ய வேண்டும் மந்திரி எம்.பி.பட்டீல் பேச்சு
அரசியல் சாசனப்படி போலீஸ்காரர்கள் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.
மைசூரு,
மைசூரு நகரில் போலீஸ் பயிற்சி மைதானத்தில் நேற்று பெண் போலீஸ்காரர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் கலந்துகொண்டு பெண் போலீசாருக்கு கோப்பைகளை வழங்கினார்.
பின்னர், அவர் பெண் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில், மந்திரி எம்.பி.பட்டீல் பேசியதாவது:-
நாட்டிலேயே போலீஸ் துறைக்கு ஒரு கவுரவம் உள்ளது. இப்படிப்பட்ட இந்த துறைக்கு பெண்கள் அதிகளவில் சேர ஆர்வம் காட்டுவது பெருமையான விஷயம். பெண் போலீசாருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க மாநில அரசு தயாராக உள்ளது. எனவே, பெண் போலீசார் எதற்கும் அஞ்சாமல், எந்தவொரு ஆசைக்கும் அடிபணியாமல் தங்கள் கடமையை நேர்மையாக செய்ய வேண்டும்.
பொதுமக்களையும், பொதுமக்களின் சொத்துக்களையும் காப்பாற்ற வேண்டியது போலீஸ்காரர்களின் கடமை. கூடிய விரைவில் போலீஸ் துறையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்.
போலீஸ்காரர்கள் அரசியல் சாசனத்தின்படி நேர்மையாகவும், நியாயமாகவும் தங்கள் கடமையை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் கே.டி.பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு அமித்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story