கொள்ளேகால் டவுனில் ‘ஓசி’க்கு மதுபானம் கேட்டு தகராறு; காசாளர் மீது தாக்குதல் ரவுடிகள் 2 பேர் கைது
கொள்ளேகால் டவுனில்உள்ள மதுக்கடையில்‘ஓசி’க்குமதுபானம் கேட்டு தகராறு செய்து,காசாளரைதாக்கிய ரவுடிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளேகால்,
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுனில் தனியார் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா கலியூரை சேர்ந்த கிரண் என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த மதுபான கடைக்கு 4 பேர் வந்துள்ளனர்.
அவர்கள் மதுபான கடை காசாளர் கிரணிடம் சென்று தங்களுக்கு ‘ஓசி’க்கு மதுபானம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் கிரண் மதுபானம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் 4 பேரும் காசாளருடன் தகராறு செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 4 பேரும், கடையில் இருந்த கிரணை வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக அடித்து, உதைத்தனர். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அந்த மதுபான கடையில் இருந்தவர்கள் கிரணை மீட்டு கொள்ளேகால் டவுன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கிரண் கொள்ளேகால் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீணா நாயக் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, மதுபான கடைக்கு சென்று ‘ஓசி’க்கு மதுபானம் கேட்டு தகராறு செய்து, காசாளர் கிரணை தாக்கியது பீமநகர காலனியை சேர்ந்த சுகாஷ், நிகில், தீபக், ஆகாஷ் என்பதும், அவர்களில் சுகாஷ், நிகில் ஆகியோரின் பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து கொள்ளேகால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடிகள் சுகாஷ், நிகில் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தீபக், ஆகாஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story