சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிக்கை வைக்கவில்லை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிக்கை வைக்கவில்லை என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைக்கு சென்று சுமார் 2½ ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் 1½ ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதன்படி வருகிற 2021-ம் ஆண்டு சசிகலா உள்பட 3 பேரும் விடுதலையாக உள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். பகல் 12 மணிக்கு சிறைக்குள் சென்ற அவர் மதியம் 1.40 மணிக்கு வெளியே வந்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. இந்த விஷயத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் சொன்னால், பா.ஜனதா கோபித்துக்கொள்கிறது.
மக்களின் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் எதிர்க்கட்சிகள் பொய் சொல்வது போல் பா.ஜனதா நினைக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம், 8 வழிச்சாலை திட்டம் தேவை இல்லை என்று மக்கள் சொல்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பு, 8 வழி சாலை திட்டத்தில் மக்களின் மனநிலைக்கு மதிப்பு அளிப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். இப்போது, அந்த திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறுகிறார். 8 வழி சாலைக்கான தேவை என்ன என்று மக்கள் கேட்கிறார்கள்.
தமிழகத்தில் ஆட்சி நிலையற்ற தன்மையில் உள்ளது. சென்னையில் தண்ணீர் பிரச்சினை அதிகரித்துள்ளது. எனது தொகுதியான ஆர்.கே.நகரில் மக்களுக்கு தண்ணீர் விநியோகத்தை நாங்களே இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்கியுள்ளோம். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை உள்ளது.
தண்ணீர் கிடைக்கவில்லை என்று சென்னையில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரே சொல்கிறார். தண்ணீர் இல்லை என்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சொல்கின்றன. சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது என்பது ஊருக்கே தெரியும். ஆனால் இந்த ஆட்சியை நடத்துபவர்கள் தண்ணீர் பிரச்சினை இல்லை என்று சொல்கிறார்கள்.
தண்ணீர் பிரச்சினைக்கு தி.மு.க. தான் காரணம் என்று குைற சொல்கிறார்கள். அந்த கட்சி சரியாக செயல்படவில்லை என்று கூறி தான் அ.தி.மு.க.வுக்கு ஆட்சியை மக்கள் கொடுத்துள்ளனர். மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும். இவ்வாறு கூறுவதில் அரசியல் கிடையாது.
தமிழக சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த ஆட்சி நிைல தடுமாறி வருகிறது. அ.ம.மு.க.வை ‘லெட்டர் பேடு’ கட்சி என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். அப்படிப்பட்ட கட்சியில் இருந்து எங்கள் நிர்வாகிகளை ஏன் உங்கள் கட்சியில் சேர்க்கிறீர்கள். எங்கள் கட்சியினரை மிரட்டி அழைத்துச் சென்று அ.தி.மு.க.வில் சேர்க்கிறார்கள்.
இந்த அ.தி.மு.க. அரசு தனது இறுதி பயணத்தில் உள்ளது. ஆட்சிக்கு முடிவு வந்துவிடும். இந்த முடிவு எப்போது வரும் என்று என்னால் சொல்ல முடியாது. ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு விலக்கு அளிக்க மறுத்துவிட்டது. அப்போது தமிழக அரசு மவுனமாக இருந்தது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டு வருவதால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார் என்று செய்திகள் வெளியாயின. அதில் உண்மை இல்லை. அவரை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.
இன்று (நேற்று) சிறைக்குள், கண்காணிப்பாளரை சந்தித்தேன். அப்போது அவர், உங்கள் சித்தி, கன்னடம் நன்றாக பேசுகிறார் என்று கூறினார். அவர் கன்னட தேர்வில் தேர்ச்சி பெற்றாரா என்பது தெரியவில்லை. இதுபற்றி அடுத்த முறை வரும்போது, அவரிடம் கேட்டு சொல்கிறேன்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.
Related Tags :
Next Story