குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 18 Jun 2019 3:46 AM IST (Updated: 18 Jun 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த பத்மாபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஆர்.கே.பேட்டை வாலாஜாபேட்டை பிரதான சாலையில் நேற்று காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்கு உடனடியாக டிராக்டர்கள் மூலம் தற்காலிகமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அம்மையார்குப்பம், வங்கனூர் கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள், தங்கள் கிராமங்களில் குடிநீர் ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.


Next Story