தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது; பெண் பலி


தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது; பெண் பலி
x
தினத்தந்தி 18 Jun 2019 12:15 AM GMT (Updated: 17 Jun 2019 10:16 PM GMT)

சென்னை நெற்குன்றத்தில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது. இதில் பெண் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பெருமாள் கோவில் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 51). இவரது மனைவி காளியம்மாள் (49). இருவரும் அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார்கள்.

மதுரவாயலில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்க இருவரும் நேற்று அதிகாலை நெற்குன்றம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். இதேபோல கும்மிடிப்பூண்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (33), நெற்குன்றத்தை சேர்ந்த பாக்கியராஜ்(32) ஆகியோரும் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது சென்னை மாநகர் பகுதியில் இருந்து பூந்தமல்லி நோக்கி வந்த தண்ணீர் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பஸ் நிறுத்தத்திற்குள் புகுந்தது. உடனே விஜயகுமார் உள்ளிட்ட 4 பேரும் அலறி அடித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர். ஆனால் கண்இமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது லாரி மோதியது. இதில் காளியம்மாளை தவிர 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

காளியம்மாளை மட்டும் சிறிது தூரம் லாரி இழுத்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மேலும் காயம் அடைந்த 3 பேரும் அங்கு விழுந்து கிடந்தனர்.

இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. காயம் அடைந்த விஜயகுமார், பாக்கியராஜ், தமிழ்செல்வன் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் அங்கு நின்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காளியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்ற நேரங்களில் இந்த பஸ் நிறுத்தத்தில் அதிக பயணிகள் காத்திருப்பார்கள். பகலில் விபத்து ஏற்பட்டிருந்தால் உயிரிழப்பு அதிகஅளவில் நடந்திருக்கும் என்று பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.

Next Story